பஞ்சாப் மாநிலத்தில் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 400ஐ தாண்டியது. 199 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 504 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 364 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 97 பேர் உயிரிழந்துள்ளனர். 125 பேர் குணமடைந்துள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது, இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதனை நீட்டிக்க மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் நேற்று ஒடிசா மாநிலம் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று பஞ்சாப் மாநில அரசு மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.