பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் தே'-ன் தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது.
நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பஞ்சாப் காவல் துறை, தலைமறைவாகியுள்ள அம்ரித்பால் சிங்கை கைது செய்ய முயன்று வருகிறது. அவர்மீது ஏற்கெனவே 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் 21ஆம் தேதி கிழக்கு டெல்லியின் மதுவிஹார் பகுதியில், அம்ரித்பால் சிங் தலைப்பாகை இல்லாமல் நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்திவரும் காவல் துறை, அவரைப் பிடிக்கவும் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையே, அம்ரித்பால் சிங், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அதில், “நான் தப்பி ஓடிவிட்டேன். எனது சகாக்களை நான் விட்டுவிட்டேன் என்று நினைப்பவர்களின் நினைப்பு தவறு. இது ஒரு மாயை. இதனை உண்மை என்று நம்ப வேண்டாம். நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. விரைவில் உலகின் முன் தோன்றுவேன். தனியாக அல்ல; ஆதரவாளர்களோடு'' எனத் தெரிவித்திருந்தார்.
அவரது இத்தகைய அறிவிப்பால், அமிர்தசரஸ் பொற்கோயில் மற்றும் பத்திண்டா குருத்வாரா ஆகிய பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை பஞ்சாப் போலீஸாரின் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்து அம்மாநில காவல்துறை அறிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று பஞ்சாபில் 'சர்பத் கல்சா' நடத்துமாறு 'அகால் தக்த்' சீக்கிய அமைப்பிற்கு அம்ரித்பால் சிங் வலியுறுத்தி இருப்பதாக பஞ்சாப் காவல் துறைக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும், இதையடுத்தே, போலீஸாருக்கு வழங்கப்பட்ட அத்தனை விடுமுறைகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அமிர்தசரஸில் இருந்து படிண்டாவின் தம்தமா சாஹிப் வரை பேரணி நடத்துமாறும் அம்ரித்பால் சிங் கூறியதாக தகவல் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேரணியில் அம்ரித்பால் சிங் கலந்துகொள்ளலாம் என சந்தேகிக்கும் போலீசார், அவரை கைது செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இதையடுத்தே போலீசாருக்கு விடுமுறை ரத்தாகி இருப்பதாகவும், அவர்கள் ஏப்ரல் 14க்குப் பின்னரே விடுமுறை கோரலாம் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, 100க்கும் மேற்பட்ட அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர்கள் 5 பேர் அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.