பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியை இன்று நேரில் சந்தித்து பேச்சுவாரத்தை நடத்தவுள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் அம்ரிந்தர் சிங்கிற்கும், அதிருப்தியாளரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கருத்து மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. டெல்லி சென்ற சித்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேராவை தனித்தனியாக சந்தித்து பேசினார். அதே நேரத்தில் அம்ரிந்தர் சிங் டெல்லியில் இருந்தாலும் அவரை ராகுலும், பிரியங்காவும் சந்திக்கவில்லை.
பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் கோஷ்டி பூசலுக்கு தீர்வு காண்பதற்காக மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் சந்தித்துப் பேசவுள்ளார்.