ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் அம்சங்கள் அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்துவோரையும் கவருவதில் தவறுவதில்லை என்பதை சமூக வலைதளங்களில் இடப்படும் பதிவுகள் வாயிலாக அறியக்கூடும். குறிப்பாக ஆப்பிள் தயாரிப்பின் ஐவாட்ச்சில் உள்ள சிறப்பம்சங்களால் பலரது உயிர் தக்க சமயத்தில் காப்பாற்றப்பட்டிருப்பதாலேயே அதன் விலை எத்தனை ஆயிரங்களிலும் இருந்தாலும் மவுசு குறைந்தபாடில்லை.
அந்த வகையில் புனேவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ட்ரெக்கிங் சென்றபோது விபத்தில் சிக்கியும் ஐவாட்ச் அணிந்திருந்ததால் காப்பாற்றப்பட்ட நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் CEO வரை கொண்டு செல்லப்பட்டு அவர் அதற்கு பதிலும் அனுப்பியிருக்கிறார்.
அதன்படி, கடந்த ஜூலை 11ம் தேதி ஸ்மித் மேத்தா என்ற 17 வயது சிறுவன் தன்னுடைய நண்பர்களுடன் லோனாவாலாவில் உள்ள பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றிருக்கிறார். அங்கு ஸ்மித் மேத்தா 130-150 அடி கீழே மலையில் இருந்து தவறி விழுந்திருக்கிறார். நல்வாய்ப்பாக மரத்தை பிடித்துக் கொண்டதால் அவரது உயிருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அப்போது ஸ்மித்தால் தன்னுடைய நண்பர்கள் அல்லது அவசர உதவியை நாட கூட போன் இல்லாமல் போயிருக்கிறது.
இருப்பினும் ஸ்மித் கையில் அணிந்திருந்த ஐவாட்ச்சில் நெட்வொர்க் வேலை செய்ததால் தனது நண்பர்கள் உள்ளிட்ட சிலரை தொடர்பு கொண்டதை அடுத்து ஒரு வழியாக ஸ்மித் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிறிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு ஆகஸ்ட் 7ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அக்டோபர் 13ம் தேதி வரை படுக்கையிலேயே ஓய்வில் இருந்திருக்கிறார்.
இதனையடுத்து, தான் உயிரோடு இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச்தான் என்று ஸ்மித் கூறியிருக்கிறார். இதுபோக, ஆப்பிள் நிறுவன செயல் அதிகாரி டிம் குக்கிற்கு இமெயில் அனுப்பியிருக்கிறார் ஸ்மித் மேத்தா. அதில், “நான் கட்டியிருந்த ஆப்பிள் வாட்சால் காப்பாற்றப்பட்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு டிம் குக் பதில் மெயிலும் அனுப்பியிருக்கிறார். அதில், “நீங்கள் குணமாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் மெயிலை பார்க்கும் போது மிகப்பெரிய விபத்தாக இருந்திருக்கும் என உணர முடிகிறது. உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி. நீங்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என டிம் குக் பதிலளித்துள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது.