பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுகந்தா மஜும்தர் மற்றும் முன்னாள் பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் கலந்துகொண்ட கூட்டத்தில், இரண்டு பிரிவாக பாஜக தொண்டர்கள் கைகலப்பில் ஈடுபட்டதுடன், நாற்காலிகளை வீசியும் தாக்கிக்கொண்டனர்.
கட்சியின் அமைப்பு கூட்டத்திற்காக இரு தலைவர்களும் மேற்கு வங்க மாநிலம் கத்வாவில் உள்ள டயஹாத்துக்கு வந்தபோது, ஒரு குழுவினர் செப்டம்பர் மாதம் வரை பாஜக மாநிலத் தலைவராக இருந்த திலீப் கோஷின் தலைமைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மற்றொரு பிரிவினர் இந்த கோஷத்துக்கு எதிராக சத்தம் போட்டு கைகலப்பில் ஈடுபட்டு நாற்காலிகளை வீசி எறிந்தனர். இந்த ரகளை நடந்தபோது அந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் மற்றும் சுகந்தா மஜும்தர் ஆகியோர் பதற்றமான சூழ்நிலையில் அமர்ந்திருந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோஷ் மற்றும் மஜும்தர் இந்த சம்பவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மறுத்து, "எங்கள் கூட்டத்தில் சிக்கலைத் தூண்டுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஏஜென்ட்களை அனுப்பியது. பிரச்னை செய்பவர்களை நாங்கள் அடையாளம் கண்டு இதில் பாஜகவினர் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தனர்.
இந்த ஆண்டு நடந்த மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்து, ஏராளமான பாஜகவினர் கட்சியை விட்டு விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ சமீபத்தில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.