ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாவில் 400 சிஆர்பிஎஃப் படை வீரர்களைக் குண்டு வைத்துக் கொல்லும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த வருடம் பிப்ரவரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். 20 வீரர்கள் காயமடைந்தனர். ஸ்கார்பியோ கார் ஒன்றில் நிரப்பப்பட்ட 350 கிலோவுக்கு கூடுதலான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இந்தத் தாக்குதலை நடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்தத் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்தியது. இந்தக் கொடூர தாக்குதலை நடத்திய பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதில் தாக்குதலைத் தொடுத்தது. தாக்குதலை நடத்திய பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் ராஜ்போராவின் ஒரு பகுதியில் கார் ஒன்று நின்றுள்ளது. இது குறித்து தகவலறிந்து கார் நின்ற இடத்துக்கு விரைந்த சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸார் அடங்கிய குழு காரைச் சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.
மேலும் அந்தக் காரில் இருந்த எண் ஸ்கூட்டர் ஒன்றின் எண் என்றும், காரை வீரர்கள் நெருங்கியபொழுது, அதிலிருந்த மர்ம நபர் தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை மட்டும் தடுக்கவில்லை என்றால் 400 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்றும் இதுவும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் செயல் என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன