இந்தியாவில் புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக பல்வேறு தரப்பினர் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனங்களையும், வீரமரணமடைந்த வீரர்களுக்கு பல்வேறு வகையில் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத திடீர் தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு காரணம் என தகவல் வெளியானது.
இதனையடுத்து பிரதமர் மோடி, ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் தருவதாகவும், தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு 200% ஆக சுங்க வரியை உயர்த்தி உத்தரவிட்டார். மேலும் பல்வேறு தலைவர்களும், மக்களும் தாக்குதல் தொடர்பான தங்களது எதிர்ப்பையும், சிஆர்பிஎப் வீரர்களுக்கு தங்களது வீரவணக்கத்தையும் செலுத்தினர்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, இந்திய விமானப்படை சார்பாக பொக்ரைனில் மிகப்பெரிய அளவில் ராணுவ ஒத்திகை நடைபெற்றது. இதில் துல்லியமாக எதிரியின் இலக்குகளை தாக்கும் போர்விமான ஒத்திகை வெற்றிகரமாக செயல்படுத்தியது.
40 சிஆர்பிஎப் வீரர்களின் மறைவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் எதிர்ப்பை பாகிஸ்தான் பாடகர்கள் இந்திய இசையில் பாட தடை விதிக்க மகாராஷ்டிரா நவநிர்மான் சேவா அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் புகைப்படம் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது.
சிஆர்பிஎப் வீரர்களுக்கு, மக்கள் பலர் தங்களது அஞ்சலியை பல்வேறு விதமாக செலுத்தி வருகின்றனர். அதில் கர்நாடகா சிவமோகாவில் இன்று 200 பேர் ரத்ததான முகாமில் பங்கேற்று தங்கள் குருதியை தானமாக செலுத்தினர்.
இன்னும் சிலர் டெல்லியில் உள்ள தாஜ் ஓட்டலில் இருந்து இந்தியா கேட் வரையிலும் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றும், மெழுகுவர்த்தி ஏற்றியும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரையில் மணற்சிற்பம் அமைத்தும், மலர்வளையம் வைத்தும், மலர்த்தூவியும் வீரமரணமடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து அஞ்சலி செலுத்தினர். எல்.ஐ.சி நிறுவனமும் தங்களின் பங்கிற்கு, தாக்குதலில் உயிரிழந்த கர்நாடகா மாநிலம் மண்டியாவை சேர்ந்த சிஆர்பிஎப் வீரரான குரு என்பவரது குடும்பத்தினரிடம் எந்தவித ஆவணமின்றி முதலீட்டு தொகையான ரூ.3,82,199 வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.