என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள், சுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை மக்கள் நலனுக்காகதான் நான் செயல்படுகிறேன் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பட்டயக் கணக்கியல் மாணவர்களின் இரண்டு நாள் மெகா மாநாடு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்... பட்டயக் கணக்காளர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அந்த வகையில் இந்த மாநாடு இன்றைய சூழ்நிலையில் அவசியமான ஒன்று. வரி செலுத்தவில்லை என்றால் நாடு முன்னேறாது. கணக்காளர்கள் அரசுக்கும் மக்களுக்கும் கணக்கு வழக்கில் ஒரு பாலமாக செயல்படுகிறார்கள்.
கணக்காளர்கள் இல்லை என்றால் இன்று எதுவும் செய்ய முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுளளது. கணக்காளர்கள் தமது வாடிக்கையாளர்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும். அதே சமயம் நாட்டுப்பற்றுடனும் செயல்பட வேண்டும். அதை சமமாக அணுக வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசையிடம், புதுச்சேரியில் ஆளுநர் வெளியேறுமாறு அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்... என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். புதுச்சேரியில் ரேஷன் கடை பிரச்னை நெடு நாளாக உள்ளது, முந்தைய ஆட்சியில் மூடப்பட்டது, இதற்கு என்று குழு அமைத்து எந்தெந்த வகையில் சரி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும்.இது தொடர்பான உண்மைகளை சொன்னால் என் மீது தவறு கூறுவதில் அர்த்தம் இல்லை.
சுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை. மக்கள் நலனுக்காகதான் நான் செயல்படுகிறேன். நான் உண்மையாக பணியாற்றி வருகிறேன். ஜி-20 மாநாடு வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், எல்லோரும் பெருமைடையவே இந்த மாநாடு நடைபெறுகிறது, பல மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு வருகிறார்கள். இதில் பங்கேற்க உள்ள அவர்களுக்கு நமது உணவு கலாச்சாரத்தை தெரியப்படுத்த உள்ளோம் இது நம் பெருமையை பறைசாற்றும் விதமாக அமையும் என்றார்.