புதுச்சேரி: சிறுவனை சிகிச்சைக்கு தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம்

புதுச்சேரி: சிறுவனை சிகிச்சைக்கு தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம்
புதுச்சேரி: சிறுவனை சிகிச்சைக்கு தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம்
Published on

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால், பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து சிகிச்சைக்கு அழைத்து சென்ற மோசமான சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், இதர பணியாளர்கள் பற்றாக்குறையாலும், போதிய மருந்து - மாத்திரைகள் மற்றும் படுக்கை வசதி இல்லாது, உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் பழுது, ஆம்புலன்ஸ் பழுது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் நோயாளிகள் தினந்தோறும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மாநில சுகாதாரத்துறையில் உள்ள குறைபாடுகளை களைந்து நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால் தள்ளுவண்டியில் சிறுவனை சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு சனிக்கிழமைதோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அந்த ரெயில் ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் கொல்கத்தாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர். அந்த ரெயில் புதுவை அருகே வந்தபோது, அந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த குடும்பத்தினர் செய்வதறியாது தவித்தனர். இதற்கிடையே அந்த ரெயில் புதுச்சேரி ரெயில் நிலையத்தை அடைந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய அவர்கள், சிறுவனை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் புதுவை சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்தது. ஆனால் அந்த ஆம்புலன்சில் உள்ள ஸ்ட்ரெச்சர் சேதமடைந்து காணப்பட்டதால், அதனை நடைமேடைக்கு இழுத்து செல்ல முடியவில்லை. இதனால் சிறுவனை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் அங்கிருந்த பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து தள்ளிக் கொண்டு ரெயில் நிலையம் வெளியே நின்ற ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவனை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பொதுவாக ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை, ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் புதுவை சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்சில் எந்த ஒரு வசதியும் கிடையாது. 
இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் கூறுகையில் 'ஆம்புலன்சில் இருந்த ஸ்ட்ரெச்சர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சேதம் அடைந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் புதிய ஸ்ட்ரெச்சர் வாங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவசர நேரத்தில் நோயாளிகளை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. புதிய ஸ்ட்ரெச்சர் வாங்க ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு ஆகும். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com