செய்தியாளர் - ரஹ்மான்
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று (08.01.2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் புதுச்சேரியில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால், புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
கடல் காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதால் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச செல்லவில்லை.