காரைக்காலில் தொடங்கிய உலக பிரசித்திப் பெற்ற மாங்கனி திருவிழாவில் காரைக்கால் அம்மையாருக்கு வெகு விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாணம் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடடனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ளது காரைக்கால் அம்மையார் ஆலயம். கி.பி 300 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார், 63 நயன்மார்களில் ஒருவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டு சிறப்பு பெற்றவர் ஆவார்.
இசைத்தமிழால் இறைவனை பற்றி முதன்முதலாக பாடியவர். தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவர் என்ற சிறப்பை பெற்றவர். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களை தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியவர்,
முதன் முறையாக இறைவனை இசையால் பாடியதால் காரைக்கால் அம்மையாருக்கு தமிழிசையின் தாய் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. அம்மையாரை பின்பற்றியே இறைவனை இசையால் பாடி தேவாரம் பாடியுள்ளார்கள் தேவார மூவர்.
பல்வேறு சிறப்பு பேருகளை பெற்ற காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் அவரது திருக்கல்யாண வைபவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதி திருமணம் செய்து வைத்தனர்.
அப்போது, பக்தர்களுக்கு வழங்கிய அட்சதையை அவரவர் தலையில் தூவிக்கொண்டு காரைக்கால் அம்மையாரை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காரைக்கால் அம்மையாரை வழிபட்டனர்.
திருமணமாகதவர்கள் இந்த திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இதனால் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக புதுச்சேரியில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.