செய்தியாளர்: அப்துல் அலீம்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் 63 நயன்மார்களில் ஒருவரும், பெண்பாற் புலவர்களில் ஒருவருமானவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டு சிறப்பு பெற்றவருமானவர் காரைக்கால் அம்மையார். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா நேற்று மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.
இந்த மாங்கனி திருவிழாவை முன்னிட்டு இன்று காரைக்கால் அம்மையாருடைய வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் அவரது திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதி திருமணம் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காரைக்கால் அம்மையாரை தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைத்தல் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. மாங்கனி திருவிழாவை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.