புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பொதுவாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டிற்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை புதுச்சேரி ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளார்.
அதாவது, மத்திய அரசு அலுவலகங்களின் பதிவேடு மற்றும் கோப்புகளில் இதுவரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், இனி வரும் காலத்தில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவை இணையத்தில் பலரும் சாடி வருகின்றனர். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையில் முயற்சி தான் இது என்றும், இதனை அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: டெல்லி அணியில் மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா? சென்னையுடனான போட்டி நடைபெறுமா?
இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கனிமொழி தனது ட்விட்டரில், "ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி மொழி, நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதல்ல' என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.