செய்தியாளர்: அப்துல் அலீம்
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமிர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் செங்கழுநீர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் காட்சியளித்த அம்மன், முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி வந்தார். இந்த தேரோட்டத்தில் தேரை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இன்று நடைபெற்று வரும் தேரோட்டத்தில் புதுச்சேரி மட்டுமல்லாது, தமிழகத்தின் அண்டை மாவட்டாங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசித்தனர். தேரோட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.