புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் பறந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரி நகரப்பகுதிகளில் ட்ரோன் பறக்கத் தடைவிதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடற்கரைசாலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளான தலைமைச் செயலகம் மற்றும் அதன் அருகில் உள்ள பிரெஞ்சு துணைத் தூதரகத்தின் மேல் இன்று காலை இரண்டு ட்ரோன்கள் பறந்தபடி படம்பிடித்தது. இதனைக் கண்ட தூதரக பாதுகாவலர்கள் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி புதுச்சேரி நகரில் வெள்ளை நகரப்பகுதிகளில் உள்ள ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், பிரெஞ்சு தூதரகம், அரவிந்தர் ஆசிரமம், அருங்காட்சியகம் உள்ளிட்ட அதிமுக்கியமான இடங்கள் உள்ளிட்ட 8 காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன் பறக்க தடைசெய்யப்பட்ட சிகப்பு மண்டலங்களாக புதுச்சேரி காவல் துறை இன்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தடையை மீறி இந்த பகுதிகளில் ட்ரோன் பறக்கவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரெஞ்சு தூதரகம் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.