புதுச்சேரி: நிலுவை சம்பளத்தை உடனே வழங்கக்கோரி ஆசிரியர்கள் போராட்டம்..!

புதுச்சேரி: நிலுவை சம்பளத்தை உடனே வழங்கக்கோரி ஆசிரியர்கள் போராட்டம்..!
புதுச்சேரி: நிலுவை சம்பளத்தை உடனே வழங்கக்கோரி ஆசிரியர்கள் போராட்டம்..!
Published on

நிலுவையிலுள்ள 10 மாத சம்பளத்தை வழங்கக்கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 32 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இதில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 மாத காலமாக புதுச்சேரி மாநில அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என யாருக்கும் சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.


இதையடுத்து இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் முடிவு எடுத்து இருந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட காரைக்கால் கடற்கரை சாலையில் கூடிய போது அங்கு திரண்டு இருந்த போலீசார் அவர்களை முற்றுகையிடக் கூடாது என தடை விதித்தனர்.


இதையடுத்து கடற்கரை சாலையில் நின்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய 10 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். கொரோனா கால பாதிப்பு ஒரு பக்கம் இருக்கும்போது சம்பளம் இல்லாமல் தாங்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் தங்களது குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமத்தில் இருந்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய ஆசிரியைகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


அதேபோல பணியில் இருக்கும்போது கடன் பெறலாம் என்றும் ஓய்வூதியம் பெறும்போது யாரும் தங்களுக்கு கடன் கூட தருவதில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவிக்கும் ஓய்வூதியதாரர்கள் அரசின் இந்த மெத்தன போக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக புதுச்சேரி அரசு தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com