`பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் ஆதிதிராவிடர்களில் பெண்களை விட குழந்தைகளே அதிகம்'- ஆய்வு

`பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் ஆதிதிராவிடர்களில் பெண்களை விட குழந்தைகளே அதிகம்'- ஆய்வு
`பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் ஆதிதிராவிடர்களில் பெண்களை விட குழந்தைகளே அதிகம்'- ஆய்வு
Published on

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (People's Union for Civil Liberties) சார்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வறிக்கையில், பிற சமூகங்களை காட்டிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள்தான் பாலியல் வன்கொடுமைக்கு அதிகம் ஆளாகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

‘The Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act (SC/ST (PoA) Act), 1989 - Tamil Nadu Scorecard 2021 [பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் (SC/ST (PoA) சட்டம்), 1989 - தமிழ்நாடு நிலை 2021] என்ற அந்த ஆய்வில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது நிகழும் வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்முடிவில், 2021-ம் ஆண்டில் பட்டியலினத்தவர்கள் மீது அதற்கு முந்தைய ஆண்டைவிடவும் அதிகளவு வன்முறைகளும் குற்றங்களும் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இந்திய அளவில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், பிற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில் சற்று குறைவான அளவில் வன்முறைகள் நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. அதேநேரம், இக்குற்றங்கள் தொடர்பாக தேசிய குற்ற புலனாய்வு துறை பதிவு செய்துள்ள வழக்கு எண்ணிக்கைக்கும், SC/ST (PoA) Act-ன் கீழ் பதிவான வழக்கு எண்ணிக்கைகளுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆய்வறிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும் பிற முக்கிய தரவுகள்:

  • தமிழகத்தில் கடந்த 2021-ல், 422 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 123 (29.14%) வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் ஆதிதிராடவர் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும், 6 (1.42%) பேர் பழங்குடியினர்களாகவும் இருக்கின்றனர். இதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் ஆதிதிராவிடர் சமூகத்தினரில் பாதிக்கப்படும் 29.14% பேரில் சுமார் 20%-ம் பேர், பழங்குடியின சமூகத்தினரில் 1.42% பேரில் 1.1% பேரும், அதாவது இரு தரப்பிலுமே பாதிக்கப்பட்டோரில் சுமார் 50%-க்கும் மேற்பட்ட பெண்கள், பிற சமூகத்தை சேர்ந்த ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நிலையில் உள்ளனர். மீதமுள்ள சில சதவீதங்கள், சுயசாதி ஆண்களால் நிகழ்த்தப்படும் வன்முறைகளாக உள்ளது.
  • இது பிற சமூகத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள் (சுயசாதி ஆண்கள் - பிற சாதி ஆண்கள் என இரு தரப்பு ஆண்களாலும் பாதிக்கப்படும் பெண்கள்) சதவிகிதத்தை விடவும் ஒப்பீட்டளவில் குறைவு.
  • பழங்குடியினர்களாக, பொது மக்கள் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பும் இருப்பதில்லை. இவர்கள், பிற சமூகத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்களை (சுயசாதி ஆண்கள் - பிற சாதி ஆண்கள் என இரு தரப்பு ஆண்களாலும் பாதிக்கப்படும் பெண்கள்) விடவும் 29% அதிக பாதிப்பை (பிற சாதி ஆண்களால்) எதிர்கொள்கின்றனர்.
  • 2011-ம் ஆண்டு 33 நாள்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகி வந்த நிலையில், இது 2020 மற்றும் 2021-ல் மூன்று நாள்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகும் அளவுக்கு மாறியுள்ளது. இப்படி பதிவான 129 வழக்குகளில், 94 வழக்குகள் (73%) சிறுமிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளாகும்.
  • தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பெண்களைவிடவும் சிறுமிகள் தான் அதிக பாலியல் வன்கொடுமைக்கு (சராசரியாக 3:1) உள்ளாகின்றனர். இது இந்திய அளவில் மிக உயரிய ஒப்பீடாக உள்ளது. பிற இடங்களில் இந்த எண்ணிக்கை சராசரியாக 1:2 என்று உள்ளது. அதாவது, பிற இடங்களில் சிறுமிகளைவிடவும் பெண்களே அதிக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர்.
  • இதேபோல இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களில் சிறுமிகள்தான், பெண்களைவிடவும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் (தமிழ்நாட்டில் 5:1-என்றும், இந்திய அளவில் 1:1.6 என்றும் இது உள்ளது.) 2020-லும் இதே நிலையே நீடித்திருக்கிறது. 2020-ல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் 66%, 18 வயதுக்கு உட்பட்டோர்தான்.
  • இந்தக் குற்றங்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில், பிற மாநிலங்களைவிடவும் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக ஆதி திராவிடர் மீதான குற்றங்களில் 84.6% குற்றங்கள் குற்றப்பத்திரிகைகளாக தமிழ்நாட்டில் தாக்கலாகிறது. இதுவே தேசிய அளவில் பார்க்கையில், 80% குற்றங்கள் மட்டுமே குற்றப்பத்திரிகைகளாக தாக்கலாகிறது.
  • பொதுவாக , SC/ST (PoA) Act-ன் கீழ் பதிவாகும் எஃப்.ஐ.ஆர், 60 நாள்களுக்குள் விசாரிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகைகளாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் அதி பெரும்பாலும் நடப்பதில்லை. உதாரணத்துக்கு, ஏப்ரல் 30,2022- கணக்கின்படி நிலுவையில் உள்ள 592 வழக்குகளில், மூன்றில் ஒரு பங்கு வழக்குகள், அதாவது 208 வழக்குகள் (35%), 2021-ல் பதியப்பட்டவையாகும். அதாவது, 120 நாள்களை கடந்தும்கூட, விசாரணைகள் முடிவடையவில்லை.
  • இதில் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை பார்க்கையில், சுமார் 6,175 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கலானவையாக இருக்கிறது. இதில் ஒரு வழக்கெல்லாம், 1992-ல் பதிவான வழக்காகும். கிட்டத்தட்ட 5,000 (துல்லியமாக 4,946) வழக்குகளில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தீர்ப்பு தாமதமாகி உள்ளது. சுமார் 30 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன, மேலும் 501 வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன”

இந்தத் தரவுகள் மூலம், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் உட்பட எஸ்.டி வகுப்பை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள், பிற சமூகத்தினரைவிடவும் அதிக பாதிப்பை எதிர்கொள்வது மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com