பொதுதுறை வங்கிகள் சிலவற்றை இணைக்கும் அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரத்தில் தேக்கநிலை நிலவி வருகிறது. இதனைப் போக்க மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில சலுகைகளை அறிவித்தார். அத்துடன் வரும் வாரங்களில் சில முக்கிய சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் பொதுதுறை வங்கிகளை இணைக்கும் திட்டத்தை விரைவில் மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக கலந்து ஆலோசிக்க 10 பொதுதுறை வங்கிகளின் தலைவர்களை மத்திய நிதி அமைச்சகம் இன்று அழைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் பஞ்சாப் நேஷனல் பாங்க், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, யுனைடெட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளின் தலைவர்கள் நிதி அமைச்சகத்தின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஆந்திரா வங்கி மற்றும் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கி உள்ளிட்ட மூன்று வங்கிகள் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல மற்ற வங்கிகளை கனரா வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசின் முதலாவது ஆட்சி காலத்தில் 2017ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியுடன் ஐந்து கிளை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்தாண்டு ஏப்ரல் மாதம் பாங்க் ஆஃப் பாரோடா வங்கியுடன் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி இணைக்கப்பட்டது. வங்கிகளின் சட்டத்தின்படி வங்கிகளை இணைப்பதற்கு முன்பு மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.