“மக்களின் தீபாவளி கொண்டாட்டம் மத்திய அரசின் கையில்தான்”-உச்சநீதிமன்றம்
இந்த ஆண்டு சாமானிய மக்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து போடப்பட்ட பொதுமுடக்கத்தால், பலர் வருமானத்தை இழந்தனர். இதனால் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களுக்கான மாத தவணையை திருப்பி செலுத்த முடியாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதனை அடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் இறுதிவரை இஎம்ஐ எனப்படும் மாத தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கியது.
ஆனால் அந்த குறிப்பிட்ட காலத்தில் செலுத்தப்படாத கடன்களுக்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்து கொள்ள கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு, வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு ஏற்bfனவே இந்த வழக்கில் தெரிவித்திருந்தது.
அதை ரிசர்வ் வங்கியும் ஏற்றுக் கொண்டிருந்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இதனை நடைமுறைப்படுத்த ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு மற்றும் சில வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதற்கு, இந்த இக்கட்டான சூழலில் அரசு இவ்வாறு கால அவகாசம் கேட்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கூறினர்.
மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரக்கூடிய சூழலில் இந்த ஆண்டு சாமானியர்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்றும் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முறையை விரைவாக நடைமுறைப் படுத்துங்கள் என்றும் அறிவுரை வழங்கினர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீர்க்கமான ஒரு முடிவினை எடுக்கும் என நம்புவதாக கூறிய நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.