பி.எஸ்.எல்.வி சி-54 ராக்கெட், புவி நோக்கு செயற்கைக்கோள் மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பிஎஸ்எல்வி -சி 54 ராக்கெட் ஏந்திச் சென்றுள்ள செயற்கைக்கோள்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஒரு புவி நோக்கு செயற்கைக்கோள் மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களை PSLV C54 ராக்கெட் ஏந்திச் சென்றுள்ளது. இது 56 ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டராகவும், அகலம் 4.8 மீட்டராகவும் உள்ளது. ராக்கெட் 321 டன் எடை கொண்டது.
இந்த ராக்கெட்டில் ஏவப்பட்ட புவிநோக்கு செயற்கைக்கோள் EOS - 6 மூன்றாம் தலைமுறை ஓசன்சாட்-2 (Ocean Sat 2 ) தொடர் செயற்கைக்கோள் வகையைச் சார்ந்தது. கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப மாறுபாடு மற்றும் கடற்பரப்பில் ஏற்படும் வேறுபாடுகளை கண்டறிய இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதோடு எட்டு நானோ செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி சி-54 சுமந்து சென்றுள்ளது. இவை தொலை உணர்வு செயற்கைக்கோள்கள் ஆகும்.
இந்த எட்டு நானோ செயற்கைக்கோள்களில், Nano Mx (INS - 2), APRS Digipeater (INS - 2B) ஆகியவை பூட்டானுக்கான இஸ்ரோவின் நானோ செயற்கைக்கோள்களாகும். இவை ஒரே செயற்கைக்கோளாக கருதப்படுகிறது.
அடுத்து, ஆனந்த் என்ற தனியார் நானோ செயற்கைக்கோளும், அமெரிக்காவின் நான்கு நானோ செயற்கைக்கோள்களான ஆஸ்ட்ரோ காஸ்ட்டும் விண்ணில் ஏவப்படுகின்றன. இந்தியாவைச் சேர்ந்த துருவா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய இரண்டு தைபோல்ட் (thypolt) செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.