“1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்களுக்கு உடடினயாக உதவுங்கள்”- உச்சநீதிமன்றம்

“1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்களுக்கு உடடினயாக உதவுங்கள்”- உச்சநீதிமன்றம்
“1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்களுக்கு உடடினயாக உதவுங்கள்”- உச்சநீதிமன்றம்
Published on

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள 1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்களுக்கு அவசரமாக உணவு மற்றும் பண உதவிகளை வழங்கவேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக வேலையில்லாமல் இருக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு, பண உதவி மற்றும் பிற அடிப்படை வசதிகளை அவசரமாக வழங்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில், நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 96 சதவீத பாலியல் தொழிலாளர்கள் தொற்றுநோயால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர் என்று மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த முடியுமா, அவர்களுக்கு உடனடி உதவியை வழங்க முடியுமா என்று கேட்டறிந்தனர். ''அவர்கள் இப்போது கடும் துயரத்தில் உள்ளனர், அவசரமாக ஏதாவது செய்ய வேண்டும். இது லட்சக்கணக்கான மக்களின் உயிர்வாழ்வைப் பற்றியது. எங்கள் உத்தரவுகளுக்காகக் காத்திருக்காமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏதாவது செய்ய வேண்டும்'' என்று நீதிபதி ராவ் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாளச் சான்றுகளை வற்புறுத்தாமல் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. தொற்றுநோயால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க, பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தர்பார் மஹிலா சமன்வயா குழு உச்ச நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து நீதிபதிகள் இந்த உத்தரவை வழங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com