விவசாயிகள் போராட்டத்தின்போது திறம்பட செயலாற்றிய டெல்லி போலீசாரின் துணிச்சலை மெச்சுகிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது, சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பகுதிக்குள் செல்லாமல் மற்ற பகுதிக்குள் சென்று செங்கோட்டைக்குள் நுழைந்தனர். அவர்களை தடுப்பதற்காக போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசினர். தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களில் சிலர் தாங்கள் வைத்திருந்த கத்தி, கம்பை கொண்டு போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மேற்பட்ட போலீஸார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திரத்ராம் மருத்துவமனை மற்றும் சுஷ்ருதா மருத்துவ மையம் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித் ஷா “டெல்லி காவல்துறையின் தீரமிகு காவலர்களை இன்று மருத்துவமனையில் சந்தித்து, அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினேன். குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறையில் அவர்கள் காட்டிய துணிச்சலையும், உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமையடைகிறது” என தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரின் குடும்பத்தினரையும் சந்தித்து அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார்.
இது குறித்து சுஷ்ருதா மருத்துவ மையம் கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் குமார், "64 போலீசார் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பலருக்கும் லேசான காயமே ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். இதில் இருவருக்கும் மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலையும் சீராக இருக்கிறது. சிலருக்கும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது" என்றார்.