ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மகிளா காங்கிரஸ் தலைவர் போலீசார் மீது எச்சில் துப்பியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. அதன்பேரில், ராகுல் காந்தி கடந்த 13ந்தேதி முதன்முறையாக அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்காக ஆஜரானார். இந்த விசாரணையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நிர்வாக இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நான்காவது நாளாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி, அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் காந்தி நேற்று மீண்டும் ஆஜரானார். இந்நிலையில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லியில் அக்கட்சியின் தலைமையகத்தில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
அமலாக்க துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் மகிளா காங்கிரசின் தலைவி நெட்டா டி சோசாவும் கலந்து கொண்டார். காவல்துறையினர் அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீஸ் வேனில் இருந்த அவர் கீழே இறங்க முயன்றார். பேருந்தின் உள்ளே நின்றபடி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், திடீரென வேனுக்கு வெளியே நின்றிருந்த போலீசார் மீது எச்சில் துப்பினார். அவர் எச்சில் துப்பும் வீடியோ வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.