நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஞ்சியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், போலீஸாரால் 6 முறை சுடப்பட்ட இளைஞர் அதிசயத்தக்க வகையில் உயிர் பிழைத்திருக்கிறார்.
நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் நுபுர் சர்மா, அனில் ஜிண்டால் ஆகியோர் அண்மையில் தெரிவித்த கருத்துகள் மிகவும் சர்ச்சையானது. வளைகுடா இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது. இதனைத் தொடர்ந்து, நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மேற்குறிப்பிட்ட இருவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
குறிப்பாக, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்ச் சூடு நடத்த வேண்டிய நிலை உருவானது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ராஞ்சியில் கலவரத்தின் போது கடைக்கு சென்றிருந்த அப்சார் (24) என்ற இளைஞர் மீது சரமாரியாக துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவரது வயிற்றுப் பகுதி மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் 6 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தது தெரியவந்தது. அந்த இடங்களில் இருந்து ரத்தப் போக்கும் அதிகமாக இருந்ததால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடலில் இருந்து 4 குண்டுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. சிகிச்சை பலனாக அவர் தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அவரது உடலில் 2 குண்டுகள் இருப்பதாகவும், சில நாட்கள் கழித்து அவை அகற்றப்படும் எனவும் மருத்துவர்கள் கூறினர். 6 குண்டுகள் பாய்ந்தும் இளைஞர் உயிர் பிழைத்தது அரிதான நிகழ்வு என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.