கனடாவில் உள்ள காலிஸ்தான் சார்புடைய சிறிய குழுக்கள் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகளை பரப்பி வருகின்றன என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்திருக்கிறார்
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன், " கனடாவில் காலிஸ்தான் சார்புடைய ஒரு சிறிய குழு உள்ளது, அவர்கள் தங்கள் தீவிரவாத அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை பரப்புகிறார்கள், ஆனால், கனடாவில் உள்ள பெரும்பான்மையான இந்திய வம்சாவளியினர் இந்தியாவுடன் அன்பான உணர்ச்சி ரீதியான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு உழைத்து வருகின்றனர் " என்று தெரிவித்தார்
மேலும், "இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் கனடாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கும் அடிப்படைக் கொள்கையை இரு அரசுகளும் அங்கீகரித்துள்ளன. தீவிரவாத சக்திகளின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான எங்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய, இந்திய அரசு கனடா அரசுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது " என்று அவர் கூறினார்.
கனடாவில் உள்ள இந்தியர்களுடன் இந்திய அரசு நெருங்கிய தொடர்பைப் பேணுவதாகவும், சமூகத்துடனான பிணைப்பை வலுப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்வதே அதன் கொள்கை எனவும் அமைச்சர் முரளீதரன் கூறினார்.