ஆதரவாளர்களை அருகில் நின்று சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி தடுப்புகளைத் தாண்டியச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக (உத்தரப்பிரதேசம் கிழக்கு) பிரியங்கா காந்தி ஏற்கெனவே நியமிக்கப்பட்டார். அதன்பின் அவர் தேர்தல் பணிகளை மும்முரமாக கவனிக்கத் தொடங்கினார். வீதி வீதியாக சென்று காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டபோது கூட்டம் அலைமோதியது.
அப்படித்தான் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி நேற்று பங்கேற்றார். அவரைக் காண்பதற்காக ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டிருந்தனர். ஆனால் இடையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தன்னை நோக்கி ஆரவாரம் எழுப்பிய தொண்டர்களை அருகில் நின்று பார்க்க ஆசைப்பட்ட பிரியங்கா காந்தி, தடுப்புகளைத் தாண்டி குதித்து மறுபக்கம் சென்றார். பின்னர் ஆதரவாளர்களின் விருப்பத்திற்கேற்ப செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. தடுப்புகளை ஏறி குதிக்கும்போது பிரியங்கா காந்தி சிகப்பு நிற சேலையில் காணப்படுகிறார். அவர் தடுப்புகளை தாண்டும்போது, அவரது பாதுகாப்பிற்கு நின்ற போலீசாரும் தடுப்புகளை தாண்டினர். பிரியங்கா காந்தி தடுப்புகளைத் தாண்டுவதை வீடியோவில் பார்த்த பலரும், அவரின் செயல் இந்திரா காந்தியை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தேர்தல் பரப்புரையின் போது தனக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்களுடன் பிரியங்கா காந்தி கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவமும் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி பரப்புரைக்காக காரில் சென்ற போது சிலர் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், பிரியங்காவுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். இதனைக் கண்ட அவர் உடனே கிழே இறங்கி தனக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்களுடன் சிரித்த முகத்துடன் பேசி வாழ்த்து கூறினார். மேலும் அவர்களுடன் கை குலுக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். பிரியங்கா காந்தியின் இந்தச் செயலால் எதிர்தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.