இந்து கலாச்சாரம் குறித்து தனது மனைவியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா கற்றுக் கொடுத்துள்ளதாக அவரது கணவர் நிக் ஜோனாஸ் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கும் இவரது நீண்ட நாள் காதலருமான நிக் ஜோனாஸூக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. வட இந்தியாவில் நேற்று ‘கர்வா சௌத்’ (Karva Chauth) பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையில் மனைவிகள் தங்களின் கணவருக்காக விரதம் இருந்து பிரார்த்தனை செய்வார்கள்.
பிரியங்கா சோப்ராவிற்கு திருமணமான பிறகு வரும் முதல் கர்வா சௌத் பண்டிகை என்பதால் இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “திருமணத்திற்கு பிறகு நான் கொண்டாடும் முதல் கர்வா சௌத் பண்டிகை இது. இதனை எப்போதும் நான் மறக்க மாட்டேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து அவரது கணவர் நிக் ஜோனாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “என்னுடைய மனைவி ஒரு இந்திய பெண்மணி. அவர் இந்து மதத்தை சார்ந்தவர். அவர் எனக்கு இந்து மத கலாச்சாரத்தை கற்று தந்துள்ளார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். அனைவருக்கும் என்னுடைய கர்வா சௌத் பண்டிகை வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.