தனியார் ரயில் சேவை திட்டத்தில் ரயில் டிக்கெட்டுக்கான கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமாக இயங்கிவரும் ரயில்வே துறையில் தனியார் துறையின் பங்களிப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நன்கு வருவாய் தரக்கூடிய தடங்கள் கண்டறியப்பட்டு அதில் தனியார் ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டது.
தனியார் துறை ரயில்களை இயக்குவது தொடர்பான திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பாம்பார்டியர் டிரான்ஸ்போர்ட் இந்தியா, சீமென்ஸ் லிமிடெட், ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்களுக்கு ரயில்வேத் துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். .
அப்போது ரயில்வே துறை அதிகாரிகள் கூறும்போது, ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்களுக்கு ரயிலுக்கான கட்டணத்தையும் நிர்ணயம் செய்ய உரிமை உண்டு. எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை.
ரயில்களை இயக்குவது, கொள்முதல் செய்வது, வாடகைக்கு எடுப்பது என அனைத்திலும் தனியார் நிறுவனங்களுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தனர். 2023ம் ஆண்டு முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.