கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது.ஆனால், எதிர்பார்த்த அளவு அதிகனமழை இல்லாமல் இருந்தது.
பொதுவாகவே, வானிலை மையங்கள் மழைப்பொழியும் என்றால், வெயில்தான் அடிக்கிறது என்ற பொதுவான கருத்துக்கள் முன்வைக்கப்படும் சூழலில், நெட்டிசன்களுக்கு இது மீம் கன்டண்ட்டாகவே மாறியது.
இந்தநிலையில், வானிலை குறித்த எச்சரிக்கையில், துல்லியத்தன்மை எங்கே இழக்கப்படுகிறது. அதற்கான பிரச்னைகள் என்ன ? என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரனிடத்தில் கேட்டோம்.
இது குறித்தான விரிவான, தெளிவான தகவல்களை அவர் வழங்கியிருக்கிறார்.அதைக் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு மண்டல வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Center ) உள்ளது. தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைமையகம் சென்னையில் செயல்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து வரும் மழைக்குறித்தான எச்சரிக்கைகளும், RMC யிலிருந்து வரும் எச்சரிக்கைகளும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். மாறுப்பட்டிருக்காது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தனியார் வானிலை ஆய்வாளர்கள் பார்க்கும் விதம், வானிலை ஆய்வு மையங்கள் பார்க்கும் விதத்திலிருந்து வேறுபடுகிறது.
உதாரணமாக, நான் டெல்டாவின் வானிலையை கணிக்கக்கூடிய ஆய்வாளராக இருப்பதால், டெல்டாவை பற்றியும், அங்கிருக்ககூடிய விவசாயிகள், அவர்களுக்கு எந்ததெந்த அளவு மழைப் பெய்தால் நன்மை, பாதிப்பு ஏற்படும் என்பதையும் நன்கு அறிந்துள்ளேன்.. அடிப்படையிலிருந்தே அங்கு இருக்க கூடிய விவசாய மக்களுடன் பயணிக்கும்போது அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் என்னால் கொடுக்க முடிகிறது.
குறிப்பாக, தனியார் வானிலை ஆய்வாளர்கள் மாவட்ட வாரியகவே அறிக்கை கொடுப்பார்கள். நான் வானிலையை குறித்த அறிவிப்பை கொடுக்கும்போது, டெல்டாவையே வடக்கு டெல்டா, தெற்கு டெல்டா என்று பிரித்து அறிக்கையை கொடுப்பேன். . இப்படி, வகைப்படுத்துவதன் மூலம் துல்லியத்தன்மை கிடைக்கும் துல்லியத்தன்மை வேறு விதமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், வடக்கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் , ஓரிரு இடங்களில் மிக கனமழையும் என்று பொதுவான அறிக்கையாக வானிலை மையங்கள் கொடுப்பதால், மக்களோடு அவர்களால் இணக்கமாக இணைய முடியவில்லை.. இதனால், துல்லியத்தன்மையிலும் மாற்றம் நிகழ்கிறது.
நிச்சயமாக, இது போன்ற (வகைப்படுத்துவதில்) மாற்றங்கள் RMC ல் கொண்டுவரப்பட்டால்.. இதனை அடுத்தப்பரிமாணத்திற்கு கொண்டு செல்ல முடியும். ஒரே கட்டத்தில் இருக்கும் வரை இந்த வாய்ப்பு குறைவாகிறது.
சென்னையில் மழை பெய்யவில்லை என்பது பற்றி மட்டுமே கேள்விகள் எழுப்பபடுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 15 தேதி கடலோர டெல்டா மாவட்டங்களான திருவாரூர் , நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலட்ர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்தது. ஆனால், அங்கே பதிவான மழைப்பொழிவின் அளவு 3செமீ தான்.
ஆனால், இது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. இந்த கேள்வியை தனியார் ஆய்வாளர்களிடத்தில் யாராவது கேட்டிருந்தால் கூட சென்னைக்கும் இது போன்று ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற பதில் நிச்சயம் கிடைத்திருக்கும்.
ரெட் அலர்ட் கொடுத்த வேறு சில மாவட்டங்களுக்கு சென்னையில் பெய்த மழைக்கூட பெய்யவில்லை.. ஆக, அங்கிருக்கும் விவசாயிகளும், மக்களும் எந்த அளவிற்கு மனம் துவண்டிருப்பார்கள் என்று யோசிக்க வேண்டும்.
ரெட் அலர்ட் பொறுத்தவரையிலேயே அதிக குழப்பங்கள் இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை, 20 செமீ மேல் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதன் அடிப்படையில்தான் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. எனவே,15, 16 இரண்டு நாட்களில் ஒரு நாள்தான் அதி கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால், இதற்கும் ரெட் அலர்ட்தான் பயன்படுத்தப்படுகிறது.. மிக்ஜாம் மாதிரியான ஒரு நிகழ்விற்கும் இதே ரெட் அலர்ட்தான் கொடுக்கப்படுகிறது. ஆக, வானிலை ஆய்வாளர்களுக்கு தெரியும் கொடுக்கப்பட்ட இந்த ரெட் அலர்ட்டின் பாதிப்பு என்னவென்று.. ஆனால், சாதாரண மக்களுக்கோ, ஊடகங்களுக்கோ,அரசாங்க அதிகாரிகளோ இந்த அலர்ட்டை மிக்ஜான் மாதிரியான நிகழ்வாக புரிந்துகொள்கிறார்கள்.
எனவே, வகைப்படுத்துதல் என்பது தெளிவாக இருக்க வேண்டும்..
உதராணமாக 20-30 செமீ மழைப்பொழிந்தால் அதற்கு ஒரு எச்சரிக்கையும், 40 செமீ மேல் பெய்யும் மழைப்பொழிவை வகைப்படுத்த வேறு விதமான அலர்ட்டும் இருக்க வேண்டும்.
இதை மாற்றி அமைத்தால் மட்டுமே, ரெட் அலர்ட் குறித்தான புரிதல் அனைத்தரப்பினருக்கும் எளிதாக புரியும். இதன்மூலம், துல்லியத்தன்மையையும் அதிகரிக்க முடியும்..
ஆகவே, இங்கே வகைப்படுத்துவதில் இருக்கும் பிரச்னைதான் துல்லியத்தன்மை இல்லாதது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.
வளிமண்டலத்தில் வெவ்வேறு போக்குகளில் இருக்கக்கூடிய காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தாழ்வு மண்டம் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பு 6 -7 மணி நேரத்துக்கு முன்பு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதற்கு முந்தைய இரவிலேயே கண்டறியப்பட்டது. ஆனால், அடுத்த 3 மணி நேரத்திற்கு இதன் மாற்றம் எப்படி உள்ளது என்பது கவனிக்கப்பட்டது.
மேகங்கள் வலுவடைவதற்கான வாய்ப்புகள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை நன்கு கண்டறிந்த பின்புதான் அதை அறிவிக்க முடியும். இதன் காரணமாகதான், மழைக்கு வாய்ப்பு இல்லாமல் போனது குறித்தான செய்தியும் வெளியிடப்பட்டது.
ஏற்கனவே, உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது சென்னைக்கு அருகே வருகை தந்து , நன்கு காற்றதழுத்த தாழ்வுப்பகுதியாக வழுவிழந்து கரையை கடக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கரையை கடந்த பிறகு, இது காற்றழுத்த தாழ்வு நிலையாக சென்னையை ஒட்டிய வடக்கடலோர பகுதிகளிலிருந்து கிட்டதட்ட கேரளா கடலோரப்பகுதிகள் வரையிலும் 18 ஆம் தேதி வரை நீடித்து காணப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது..
இந்தநிலையில், வடமேற்கு காற்றுக்குவிதல் தெற்கு ஆந்திராப்பகுதிகளிலும், மேற்கு வடமேற்கு காற்று என்பது தமிழக நிலப்பரப்பை நோக்கியும் நகரும்.
இதன்காரணமாக, இன்றும் , நாளையும் தமிழகத்தில் பெரிதான மழை இல்லை என்றாலும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக அக்டோபர் 18,19,20 ஆகிய நாட்களில் மேற்கு திசையிலிருந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் நிலப்பரப்பில் மேகங்கள் உருவாகி... கடலோரப்பகுதிகளுக்கு மழைப்பொழிவை கொடுக்கிறது.
இந்தநிலையில்தான், அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு பகல் நேரங்களில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் இடியுடன்,கூடிய மழையும் தமிழகத்தில் தொடரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்..
எனவே, மண்டல ரீதியாக கொடுக்கப்படும் அறிவிப்புகள் பொதுவான ஒட்டுமொத்தமாக இல்லாமல், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகளை தனித்துவமாக வழங்குதல்,
புயல் சின்னங்கள் குறித்தான எச்சரிக்கையை அறிவிக்கும்போது அதற்கென பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டு உண்மைத்தன்மை சரிபார்த்து அறிவிப்புகளை வெளியிடுதல்
சரியான வகைப்படுத்தல்
என்பவையெல்லாம் துல்லித்தன்மையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் என்று இதன்மூலம்,நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
சமீபத்தில் கூட பாமக அன்புமணி ராமதாஸ், ‘ரெட் அலர்ட்" கொடுக்கப்பட்டும் மாலை வரை ஒரு துளி மழை பெய்யவில்லை.' என்றும்,
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்,
’இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்திருந்தது. ஆனால், 500 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்து வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக அதிகமாக பெய்தது’ என்ற கேள்விகளை முன்வைத்தனர். இது ஒரு புறம் இருக்க...
மண்டல வாரியான வானிலை மையங்கள் அமைக்கப்படுவதே அந்த குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வானிலை குறித்தான துல்லியமான தகவலை கொடுக்க வேண்டும் என்பதற்காகதானே?
தனியார் ஆய்வாளர்களால் சாத்தியமாகும் வானிலை குறித்தான துல்லியத்தன்மை, வானிலை ஆய்வு மையங்கள் கொடுக்கும் அறிவிப்புகளில் வேறுபடுவதற்கான காரணம் என்ன?
இங்கே எங்கு தவறு நடக்கிறது? என்ற கேள்விகள் எல்லாம் மக்களாகிய நமக்கும் மறுபுறம் எழத்தான் செய்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.