’தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை’ என்ற தீர்ப்பு மாட்டிறைச்சி விவகாரத்துக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி, மாட்டிறைச்சி (மாநிலத்துக்கு உள்ளே அல்லது வெளியே கொல்லப்பட்டது) வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றம். இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம் மாநிலத்துக்கு உள்ளே கொல்லப்பட்ட மாட்டிறைச்சி வைத்திருத்தல் மட்டுமே குற்றமாகும் என கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. மாநில அரசின் இந்த சட்டம், தனிநபர் ரகசியத்தில் தலையிடும் செயல் எனவும் அறிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசும், பல அமைப்புகளும் மேல்முறையீடு செய்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ‘தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை’ என தீர்ப்பளித்தது. ஒருவர் எதை சாப்பிட வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும்? என யாரும் கட்டாயப்படுத்த முடியாது என அப்போது கூறிய நீதிபதிகள், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவரவர் தனிப்பட்ட ரகசியம் எனவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளில் ஒன்று உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் வழங்கிய தனிநபர் ரகசியம் குறித்த தீர்ப்பை குறிப்பிட்டு பேசினார்.
இதற்கு நீதிபதிகள், ‘அந்த தீர்ப்பு, இந்த மாட்டிறைச்சி விவகாரங்களுக்கும் பொருந்தும்’ என்றனர். பின்னர் இந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.