நாடு முழுவதும் நவராத்திரையை முன்னிட்டு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி, தசரா பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவைப் பயன்படுத்தி, சிறைச்சாலையில் நாடகம் போட்டபோது, வேடமிட்டு நடித்த சிறைக் கைதிகள் இருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ’ராம்லீலா’ நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அனுமானின் வானரசேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டு நடித்த இரண்டு கைதிகள் சீதையைத் தேடுவதுபோல் காட்சிக்கு வெளியே சென்றுள்ளனர். ஆனால் சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை. அதன்பிறகே அவர்கள் தப்பியோடியதைச் சிறை அதிகாரிகள் உணர்ந்துள்ளனர்.
கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பங்கஜ் என்ற கைதியும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி, சிறைக்கு வந்த ராஜ்குமார் என்ற கைதியும் தப்பியோடி உள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து சிறையிலிருந்து தப்பிக்க வெகுநாட்களாகத் திட்டம் தீட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், சிறையில் நடைபெற்ற நவராத்திரி ராம்லீலா நாடகத்தின்போது, குரங்கு வேடமிட்ட அவர்கள், சீதையைத் தேடச் செல்லும் காட்சியில் நைசாக நழுவியுள்ளர். மேலும், கட்டுமானப் பணிக்காகச் சிறையில் வைத்திருந்த ஏணியைப் பயன்படுத்தி சிறைச் சுவரைத் தாண்டி வெற்றிகரமாகத் தப்பித்துள்ளனர். தற்போது போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாய்க் களமிறங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஹரித்வார் மூத்த போலீஸ் சூப்பிரண்டு (SSP) பிரமேந்திர சிங் டோபல், "இரண்டு கைதிகள் தப்பிச் சென்றதாக, இன்று காலை கட்டுப்பாட்டு அறை மூலம் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் ஒவ்வோர் இடத்திலும் சோதனைச் சாவடிகளை அமைத்துத் தீவிரமாய்த் தேடி வருகிறோம். சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஹரித்வார் மாவட்ட மாஜிஸ்திரேட் கர்மேந்திர சிங், சிறை நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "நிச்சயமாக, இது சிறை நிர்வாகத்தின் தவறாகும். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, துறைரீதியான மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும்” என விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், தற்போதைய முதல்வர் புஷ்கர் தாமியை தாக்கிப் பேசியுள்ளார். அவர், "நம் மாநிலத்தில் என்ன நடக்கிறது? இது நமது நிர்வாக அமைப்புக்கு பெரும் களங்கம். இது ஒரு தீவிரமான விஷயம். கோவிட்-19 காலத்திலும், இப்படி ஒரு தவறு நடைபெற்றது. தனிமைப்படுத்துவதற்காக பல கைதிகளுக்கு பரோல் வழங்க வேண்டும். மற்ற இடங்களை தனிமைப்படுத்தும் மையங்களாக அமைத்திருக்கலாம். இது காவல் துறையின் கடுமையான குறைபாடு. முதல்வர் செய்த பெரும் தவறு. அவர் அதை மீட்டெடுக்க வேண்டும்” என குற்றஞ்சாட்டியுள்ளார்.