2019 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு சன்மானம் அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திட்டத்தின் மூலம் வருடத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.மூன்று தவணைகளாக 2000 ரூபாய் என்ற கணக்கில் விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது.
அதன்படி இந்தாண்டு இத்திட்டத்தின் கீழ் 18ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகை 9 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையின் அதிகபட்ச பங்கு உத்தரப் பிரதேசத்துக்கு செல்கிறது. அங்கே ஏறக்குறைய 2 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆகவே அந்த மாநிலத்திற்கு மட்டும் இந்த தவணை உதவித்தொகையில் 4,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இத்தவணை மூலம் பஞ்சாப் மாநிலத்திற்கு 445 கோடி ரூபாயும் ஹரியானாவுக்கு 305 கோடி ரூபாயும் சென்றடைந்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை இந்த திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 36 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த தவணை மூலம் 720 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு சென்றடைந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இந்த தவணையில் 2 கோடி ரூபாய் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேற்கு வங்க அரசு இந்த திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் அந்த மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவித் தொகை கிடைப்பதில்லை.