அப்துல் கலாம் சொன்னது போல் கனவு காண வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

அப்துல் கலாம் சொன்னது போல் கனவு காண வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
அப்துல் கலாம் சொன்னது போல் கனவு காண வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
Published on

அப்துல் கலாம் சொன்னது போல நமது கனவுகளை, நனவாக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். 

ராணுவத் தளவாட உற்பத்தியில் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின்கீழ் சிறிய நிறுவனங்களும் பங்கேற்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்துப் பேசியபோது இதை அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவில் தொழில்துறைக்கு சாதகமான வெளிப்படையான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். சில வருடங்களுக்கு முன் சிறிய அளவில் தொடங்கிய ராணுவத் தளவாட உற்பத்தி தற்போது பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். நாம் தளவாட கொள்முதல் செய்வதை விட, நம்மிடம் கொள்முதல் செய்யும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என்றார்

முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல் கலாம் சொன்னது போல் நாம் அனைவரும் கனவு காண வேண்டும். கனவு கண்டால் அது எண்ணங்களாக மாறும். அந்த எண்ணங்கள் செயலாக உருப்பெறும். அந்தச்செயல் வெற்றியை தேடித்தரும். ராணுவத் தளவாட உற்பத்தியில் நாம் வெற்றியை எட்ட வேண்டும்

ஒரு காலத்தில் ஆட்சி அதிகாரம் செயலற்று இருந்ததால், பாதுகாப்புத்துறை இக்கட்டான நிலையில் இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தற்போது அந்த நிலை இல்லை என்றும் எதிர்காலத்தில் அப்படியொரு சூழ்நிலை ஏற்படாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். போர் தொடுத்து நா‌டுகளை வெல்வதை விட, மக்கள் இதயங்களை வெல்வதையே தாம் விரும்புவதாகவும் பிரதமர் கூறினார். அமைதியை விரும்பும் அதே நேரத்தில் மக்களின் பாதுகாப்பிற்காக இந்திய வீரர்கள் எல்லையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்றும் பிரதமர் பாராட்டினார்.

ஓரு காலகட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதனை நாம் சாத்தியப்படுத்தினோம். அத்தகைய ஆடைகளை தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல போர் விமானங்கள் வாங்குவது குறித்தும் பிற அரசுகள் ஆலோசித்துக் கொண்டே இருந்தன. நாம் 110 போர் விமானங்களை வாங்கி சாதித்துள்ளோம் எனக் கூறினார். இறுதியில் திருக்குறள் படித்து தனது உறையை நிறைவு செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com