கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் காணோலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநில முதலமைச்சர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின்னர் மே 3ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் 3ஆம் கட்ட சமூக பரவலுக்கு செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தல் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று காணோலி காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த மாநிலங்களில் மற்றும் மாநிலங்களின் சில மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அத்துடன் எந்ததெந்த இடங்களில் ஊரடங்கை நீட்டிக்கலாம் எனவும் பேசவுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பின்னர், இன்றோ அல்லது ஒரு சில தினங்களுக்குப் பின்னரோ பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.