அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “குடியரசுத் தலைவரின் உரையை கேட்காமலேயே பலரும் அதுகுறித்து விமர்சனம் செய்கின்றனர். குடியரசுத்தலைவர் உரை வலிமையானது என்பதால் அதை கேட்காதவர்களிடம் கூட சென்று சேர்ந்து இருக்கிறது. இந்தியா தற்போது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியா வாய்ப்புகளுக்கான நாடாக மாறி உள்ளது. நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இளைஞர்கள் தங்கள் கனவுகளை எட்டிப்பிடிக்க தற்போதுள்ள வாய்ப்புகளை நழுவவிட அனுமதிக்க மாட்டோம்.
அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர். ஏழைகள் கூட நாட்டின் ஒற்றுமைக்காக வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள்” என்றார்.
" நீங்கள் சமூக ஊடகங்களில் பார்த்திருக்கலாம். ஒரு வயதான பெண்மணி தனது குடிசைக்கு வெளியே நடைபாதையில் உட்கார்ந்து, ஒரு மண் விளக்கைக் கொண்டு, இந்தியாவின் நலனுக்காக பிரார்த்திக்கிறார். நாம் அவரை கேலி செய்கிறோம். பள்ளிக்கே செல்லாத ஒருவர்கூட விளக்குகளை ஏற்றி இந்தியாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அது கேலி செய்யப்படுகிறது’‘ என்றார்.