உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் ஸ்தலம் சுற்றுலா செல்ல சிறந்த இடம் என்றும் அந்தக் கோயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது சீரமைக்க காங்கிரஸ் அரசு எனக்கு அனுமதியளிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி புகார் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் யாத்திரை நாளையுடன் முடிகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று
கேதார்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவரோடு உத்தரகாண்ட் முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “உத்தரகாண்ட் மக்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். இங்கே குடும்பத்திற்கு ஒருவர் ராணுவத்தில்
பணியாற்றுகின்றனர். கேதார்நாத் ஆன்மீக பயணத்திற்கு மட்டுமல்ல; சுற்றுலா ஸ்தலமாகவும் சிறந்தது.இதை மிக முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் மட்டுமின்றி இங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலையும், காடும் மக்களை ஈர்க்கிறது. இதன் இயற்கை சூழல் மாறாமல்
சீரமைப்புப் பணிகள் உரிய காலத்தில் நடத்தி முடிக்கப்படும்.” என்றார்.
மேலும், “2013ம் ஆண்டில் பலத்த மழை வெள்ளத்தால் கேதார்நாத் கோயில் பாதிக்கப்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நான், கோயிலை சீரமைக்க
முன் வந்தேன். உத்தரகாண்ட் அரசு முதலில் அதை ஏற்றது. ஆனால் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசு அதற்கு தடை போட்டது. டெல்லியில் இருந்து வந்த உத்தரவால் உத்தரகாண்ட் அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால் என்ன? பிரதமராக வந்து
அந்தப் பணியை செய்ய மீண்டும் எனக்கு கடவுள் வாய்ப்பளித்துள்ளார்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.