வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள பிரதமர் மோடி. குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் எனவும் அறிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற கேள்வி நேரத்திற்குப் பிறகு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, “ஒவ்வொரு சீக்கியருக்காகவும் நாடு பெருமை கொள்கிறது. அவர்கள் இந்த நாட்டிற்காக என்ன செய்யவில்லை? நாம் அவர்களுக்கு எந்த மரியாதை கொடுத்தாலும் எப்போதும் அது குறைவாகவே இருக்கும். எனது வாழ்க்கையின் முக்கியமான ஆண்டுகளை பஞ்சாபில் கழித்த நான் அதிர்ஷ்டசாலி. அவர்களுக்காக சிலர் பயன்படுத்தும் மொழி மற்றும் அவர்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பது ஒருபோதும் தேசத்திற்கு பயனளிக்காது” எனத் தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய அவர் “ எங்கள் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உழவர் சங்கத் தலைவர்களுடன் தொடர்ந்து பேசுகிறார். எந்த பதற்றமும் இல்லை, இந்த மன்றத்தின் மூலம், நான் அவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறேன், ஆனால் பிரச்னைகளை தீர்க்க ஒருவர் ஒருபடி மேலே செல்ல வேண்டும். நாம் ஒரு நிலையான உலகில் வாழவில்லை. எதிர்காலத்தில், ஒரு சிறந்த ஆலோசனை வந்தால், அதைப் பற்றி அரசு தீவிரமாக சிந்திக்கும். ஏ.பி.எம்.சி மற்றும் மண்டிகளை வலுப்படுத்தவே நாங்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்தபட்ச ஆதார விலையும், மலிவான ரேஷனை வழங்கும் நலத்திட்டமும் தொடரும்” எனத் தெரிவித்தார்