"என் சோகத்தை விவரிக்க வார்த்தையில்லை” - ரயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அதேநேரம் ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்பட்டு வருகிறது.
முதற்கட்ட தகவலின்படி, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தனக்கு கிடைத்த சிக்னலில் ஏற்பட்ட பிரச்னையால் மெயின் லைனில் இருந்து லூப் லைனிற்கு செல்கிறது. லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது கோரமண்டல் மோதியுள்ளது. இந்த விபத்தில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் எதிர் திசையில் உள்ள மெயின் ட்ராக்கில் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் எதிரே ஹவுரா நோக்கி வந்து கொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ், ஏற்கனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது முதற்கட்ட தகவல் மட்டுமே.
இந்த ரயில் விபத்தில் தற்போது வரை 288 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா பாலசோர் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்றார். புவனேஷ்வர் விமான நிலையத்தில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற மோடி, அங்கு விபத்து நடைபெற்ற இடங்களைப் பார்வையிட்டார். அத்துடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர், ரயில் விபத்தில் காயமடைந்து கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மோடி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்த துயர சம்பவத்தில் எனக்கு ஏற்பட்ட சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இது ஒரு கடினமான நேரம். காயமடைந்த பயணிகளுக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் அரசாங்கம் முழு முயற்சி எடுக்கிறது. இதுகுறித்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள், யாரும் தப்பிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.