அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உளவு பார்க்கப்பட்டதா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ப.சிதம்பரம், பெகாசஸ் உளவு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் அல்லது தற்போது பதவியில் உள்ள நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சட்டவிரோதமாக உளவு பார்த்தது மூலம் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக ஆதாயம் அடைந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் ப.சிதம்பரம் தெரிவித்தார். பெகாசஸ் விவகாரத்தை பாஜக எம்பிக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிப்பதை விட நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிப்பதே சரியாக இருக்கும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக உளவு பார்க்கப்படவில்லை என்றுதான் மத்திய அமைச்சர் வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளாரே தவிர உளவே பார்க்கவில்லை என அவர் திட்டவட்டமாக மறுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது என சிதம்பரம் தெரிவித்தார்.