குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து ராஜ்கோட், பதிண்டா, ரேபரேலி, கல்யாணி, மங்களகிரி ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய அவர், "பிறரிடம் இருந்து நம்பிக்கை முடிவடையும் இடத்தில்தான் எனது உத்தரவாதம் தொடங்குகிறது. சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டுகளாக நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே இருந்தது. அதுவும் டெல்லியில் மட்டுமே இருந்தது.
சுமார் 70 ஆண்டுகளில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அவையும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 10 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆகவே கடந்த 70 ஆண்டுகளை காட்டிலும் இந்தியா தற்போது பல மடங்கு வேகமாக வளர்ந்து வருகிறது” என்று தெரிவித்தார்.