மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்துவிழுந்து முற்றிலும் சேதமடைந்தது. அப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில்தான் சிவாஜியின் சிலை கீழே விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சிலை சேதமடைந்தது குறித்து ஆய்வு செய்தனர். உண்மையான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
சிலை சேதமடைந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் தீபக் கேசர்கர், ”இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். அதே இடத்தில் புதிய சிலையை நிறுவுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்பிரச்னையை விரைவாக தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துவருகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதுடன், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. சிலைக்கான தரத்தில் மராட்டிய அரசு பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை எனவும், சிலை அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். ஆனால், “இந்த விவகாரத்தை அரசியலாக்க பல விஷயங்கள் இருக்கின்றன. சத்ரபதி சிவாஜி நம் அனைவரின் அடையாளம். அவர் எங்கள் கடவுள். அவரது காலடியில் தலை வைத்து ஒரு முறை அல்ல 100 முறை நான் மன்னிப்பு கேட்பேன். தயவுசெய்து இந்த விவகாரத்தை அரசியலாக்காதீர்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிவாஜி சிலை கீழே விழுந்து சேதமடைந்தது தொடர்பாக பிரதமர் மோடி, “சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல; மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததற்கு, எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.