நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், 15 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில், நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே வரும் சனிக்கிழமை மூன்றாவது முறையாகப் பதவி ஏற்பதன் மூலம் பண்டிதர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு நாட்டின் மூன்று முறை தலைவர் ஆகும் பிரதமர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் மோடி.
ஆனால், கடந்த 2014ம் ஆண்டு முதல் இதுவரை ‘மோடி’ என்ற பிம்பத்துக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
இந்த முறை வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறை பிரதமர் ஆகும் இவர் யார் ? இவரது அரசியல் தொடக்கம் எப்படி இருந்தது? இவர் கடந்து வந்த பாதைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
செப்டம்பர் 17 1950ம் ஆண்டு குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில் அமைந்துள்ள வத்நகரில், எந்த அரசியல் பின்னணியும் இல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த தாமோதர் தாஸ் முல்சந் மோதி - ஹீராபேன் இணையருக்கு 3வது மகனாகப் பிறந்தார் நரேந்திர மோடி. இத்தம்பதிக்கு 6 மகன்கள் உண்டு.
பள்ளிப் பருவத்திலேயே ஆர்எஸ்எஸ் மீது கொண்ட பற்றால், தனது 8வது வயதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் மோடி.
குடும்ப சூழல் காரணமாக தனது 20 வயதில் குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்துக்கு குடிபெயர்ந்தார். அதன் பின் 1987ம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டு அதில் உறுப்பினாராக சேர்ந்து கட்சி பணியாற்றியுள்ளார்.
உறுப்பினாராக சேர்ந்த 1 வருட காலத்தில், குஜராத் மாநில பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான அத்வானியின் ரத யாத்திரை மற்றும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு மோடிக்கு வழங்கப்பட்டது.
இதில் அவர் சிறப்பாக செயல்பட்டதை கவனித்த அன்றைய பாஜக தலைவரான அத்வானி, 1998ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் நடந்த தேர்தல் பொறுப்பாளராக மோடியை நியமித்தார். அதன் பிறகு 1998ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற பொழுது, மோடிக்கு ‘தேசிய செயலாளர்’ பதவியும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2001ம் ஆண்டு குஜராத் முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற மோடி, 2001, அக்டோபர் 7ம் தேதி குஜராத் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அடுத்த ஆண்டே ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய ‘கோத்ரா ரயில் எரிப்பு’ சம்பவத்திற்கு பொறுப்பேற்று 2002ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அதற்கு அடுத்த இடைத்தேர்தல் மற்றும் 2007, 2012 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்று 4 முறை குஜராத் மாநில முதல்வராக ஆட்சி செய்துள்ளார்.
அக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் அவர் குஜராத் முதல்வராக இருந்ததால், குஜராத் மாநிலத்தில் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையும் மோடிக்கு உண்டு.
மோடியின் பாரதிய ஜனதா கட்சி - 2014 இல் 282 இடங்களையும், 2019 தேர்தலில் 303 இடங்களையும் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த முறை 240 இடங்களை வென்று - 272 பெரும்பான்மைக்கு 32 குறைவாக உள்ளது.
பாஜக வென்ற மூன்று முறையும் அக்கட்சியினரால் பிரதமர் வேட்பாளாரக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை பிரதமாரக பதவி வகித்த நரேந்திர மோடி வரும் 9ம் தேதி மீண்டும் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்க்க உள்ளார்.
இந்தியாவின் வரலாற்றை பொறுத்த அளவில்,
1947 தொடங்கி 1952 வரை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு இருந்தார்.
1952 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 1957 வரை இரண்டாவது முறையும் நேரு பிரதமராக பதவி வகித்தார்.
அடுத்து 1957ல் நடந்த லோக்சபா தேர்தல்களிலும் நேரு வெற்றி பெற்றார். இறுதியாக 1964ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி நேரு உயிரிழந்தார். அவர் மறையும் வரை பிரதமராகவே தொடர்ந்தார்.
இந்திரா காந்தியும் கூட 3 முறை பிரதமராக இருந்துள்ளார். ஆனால் நேருவை போல தொடர்ந்து இருந்ததில்லை.
- 1966ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரியின் மறைவை தொடர்ந்து, 1967ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று இந்திரா காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அதன் பின்னர் 1971ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போர் நடைபெற்றது. பின்னர் வங்கதேசம் உருவாக்கப்பட்டது. பின் 1975ல் எம்ர்ஜென்சியை கொண்டு வந்தார். அப்போது நடந்த தேர்தலில் தோல்விய்டைந்தார்.
- இருப்பினும் அடுத்து வந்த பிரதமர்களின் ஆட்சிகள் கவிழ்ந்தன. இதனால் கடைசியாக 1980ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார்.
இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, தற்போது நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.