ஜம்மு - காஷ்மீரில் நள்ளிரவில் அமலானது குடியரசுத் தலைவர் ஆட்சி

ஜம்மு - காஷ்மீரில் நள்ளிரவில் அமலானது குடியரசுத் தலைவர் ஆட்சி

ஜம்மு - காஷ்மீரில் நள்ளிரவில் அமலானது குடியரசுத் தலைவர் ஆட்சி
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 2014-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் எந்தக் கட்சிக்குமே ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முன்பு வரை பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்தனர். பின்னர்  மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தன. மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிடிபி நிறுவனர் முஃப்தி முகமது சயீது, சில மாதங்களில் காலமானதால், அவரது மகள் முஃப்திமெஹபூபாவின் தலைமையில் கூட்டணி ஆட்சி தொடர்ந்தது.

இதனிடையே பாஜகவுக்கும், பிடிபிக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து மோதல் நீடித்து வந்தது. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ராணுவத்தை தீவிரமாக பிரயோகப்படுத்துவதை பிடிபி விரும்பவில்லை. மாறாக, பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண வேண்டும் என அக்கட்சி விரும்பியது. ஆனால், பாஜகவின் நிலைப்பாடோ அதற்கு நேரெதிராக இருந்தது. இதற்கு நடுவே, காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தன. மேலும் ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றது, ராணுவ வீரர் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்திக் கொன்றது ஆகியவை அவற்றில் உச்சகட்டமாகப் பார்க்கப்பட்டது. 

இந்தச் சுழலில் பாஜக தலைவர்களுடன் ஆலோசித்து பிடிபி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு ஜூன் 19-ஆம் தேதி கவிழ்ந்தது. அதன் பிறகு மாநிலத்தில ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மாநில சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக அமலில் இருந்த ஆளுநர் ஆட்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் ஆட்சி நிறைவடைவதை யொட்டி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக, ஆளுநர் அலுவலகம் அனுப்பிய குறிப்பை, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய அமைச்சரவைக்கு அனுப்பிவைத்தது. பின்னர், தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டு ஆளுநரின் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 

இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை ஒப்புதல் அளித்தார். இது குறித்து, வெளியிடப்பட்ட செய்திக்  குறிப்பில் "மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து நிர்வாகப் பணிகளும் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் இனி மேற்கொள்வார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும்  ஜம்மு-காஷ்மீரில் 2 எம்எல்ஏக்களைக் கொண்ட மக்கள் மாநாட்டுக் கட்சி தலைமையில் புதிய ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது. அக்கட்சிகளுக்கு பிடிபி கட்சியிலிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவு அளிக்க இருந்ததாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில், பிடிபி, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டன. இருப்பினும், எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுவதை தடுக்க சட்டப் பேரவையைக் கலைப்பதாக ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி திடீரென அறிவித்தார். இந்த விவகாரத்தில், ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com