பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா டெல்லியில் செய்தியாளர்களிடையே இதை அறிவித்தார். ராம்நாத் கோவிந்த் தற்போது பீகார் ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். பாஜகவைச் சேர்ந்த அவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து இரண்டு முறை (1994 மற்றும் 2000) மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வழக்கறிஞரான இவர் மத்திய அரசின் வழக்கறிஞராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் 1977 முதல் 1979 வரை பணியாற்றியவர். 1998ல் இருந்து 2002 வரையில் பாஜகவின் தலித் மோர்ச்சா அமைப்புக்குத் தலைவராகப் பணியாற்றினார்.
டெல்லியில் இன்று பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் ராம்நாத் கோவிந்த்தை பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த அமித் ஷா, இது குறித்து சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார் எனத் தெரிவித்தார். 23 ஆம் தேதியன்று ராம்நாத் கோவிந்த் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்றும் அவர் கூறினார்.