பழுத்த அரசியல்வாதியான சரத் பவாரை குடியரசுத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளராக களத்தில் இறக்கலாம் என பல எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. சிவசேனா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரான சரத் பவார் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதியாக போட்டியிட வேண்டும் என விரும்புகின்றன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவார் பல மூத்த அரசியல்வாதிகளுக்கு நன்கு பரிச்சயமானவர். இவரது மகள் சுப்ரியா சுலே நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்பதும் இவரது சகோதரர் அஜித் பவார் மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையாவிட்டால், தேசிய ஜனநாயக முன்னணி சுலபமாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் என்கிற சூழல் நிலவுவதால் பொதுவேட்பாளராக சரத் பவார் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்கும் என பல எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியை மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற விடாமல் தடுத்து, சிவசேனா கட்சியை கூட்டணியிலிருந்து பிரித்து, மகா விகாஸ் அகாடி என்கிற புதிய கூட்டணியை ஆட்சியில் அமர்த்தியதில் முக்கிய பங்களிப்பு சரத் பவாருடையது எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் தொலைபேசி மூலம் சரத் பவாரை தொடர்புகொண்டு உரையாடியுள்ளார். அத்துடன் ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் மும்பை சென்று சரத் பவாரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சிவ சேனா கட்சி சரத் பவாருக்கு ஆதரவாக உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருடனும சரத் பவார் தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் முன்னாள் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் பவார் நல்லுறவு பேணி வருகிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் பவார் கருத்தொற்றுமை கொண்டவர்களாக இருந்ததும், திமுக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கூட்டணியில் ஒரே நேரத்தில் அங்கமாக இருந்தன என்பதும் அனைவரும் அறிந்ததே. இடதுசாரி கட்சிகளுடனும சரத்பவாருக்கு சுமூகமான உறவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரத் பவார் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக்க மரியாதை உள்ளது என்பதும் சமீபத்தில் கூட அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள் என்பதும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் அனைவரும் அறிந்ததே. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை இல்லாத நிலையில், சரத் பவாரை வேட்பாளராக நிறுத்துவது குடியரசுத் தலைவர் தேர்தலில் மட்டுமல்ல! 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஒருங்கிணையவும் உதவும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
- கணபதி சுப்பிரமணியம்.