கல்வான் பள்ளத்தாக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக முழு நாடும் தலை வணங்குகிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 74 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டு மக்களிடையே இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் " சுதந்திரம் பெற்ற இந்தியாவின் குடிமகன்கள் என்ற சிறப்பு பெருமையை நாட்டிலுள்ள இளைஞர்கள் உணர வேண்டும். நம்முடைய விடுதலை இயக்கத்திற்கு வழிகாட்டும் ஒளியாக மகாத்மா காந்தி இருந்ததற்கு நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள். அவர் ஒரு துறவியாகவும், அரசியல் தலைவராகவும் இருந்தது இந்தியாவில் மட்டுமே நடக்க கூடியது" என்றார்.
மேலும் " உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் எதிர்த்து போராடி வருகிறது. அது அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கி பெருமளவில் உயிர்களை பலி கொண்டுள்ளது. தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த உலகை அது மாற்றியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களுக்கு தேசம் கடன்பட்டு உள்ளது. இந்த தொற்றுக்கு எதிரான போரில் பலர் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் நமது தேசத்தின் நாயகர்கள்"
சீனா மோதல் குறித்துப் பேசிய ராம்நாத் கோவிந்த் "மனிதச் சமூகம் முன் உள்ள மிக பெரிய சவாலை எதிர்த்து உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய வேளையில், நமது அண்டை நாடுகளில் சிலர் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். நமது எல்லைகளை காப்பதில் வீரம் நிறைந்த நம்முடைய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். பாரத மாதாவின் உயரிய மகன்களான அவர்கள் தேசத்தின் பெருமைக்காகவே வாழ்ந்து, மறைந்துள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக முழு நாடும் தலை வணங்குகிறது" என்றார்.