"ஹெலிகாப்டர் இறங்குவதில் சிக்கல்" குடியரசுத் தலைவரின் சபரிமலை வருகை ரத்து !

"ஹெலிகாப்டர் இறங்குவதில் சிக்கல்" குடியரசுத் தலைவரின் சபரிமலை வருகை ரத்து !
"ஹெலிகாப்டர் இறங்குவதில் சிக்கல்" குடியரசுத் தலைவரின் சபரிமலை வருகை ரத்து !
Published on

நிலக்கல் பகுதியில் ஹெலிகாப்டர் இறங்குவதில் சிக்கல் இருப்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சபரிமலைப் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஐயப்பன் கோயிலில் தற்போது மகர விளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. சபரிமலையில் ஜனவரி 15 ஆம் தேதி மகர ஜோதி தரிசனமும் மகர விளக்கு பூஜை வைபவமும் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. தனி விமானத்தில் கொச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் சபரிமலை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கேரள அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதில், தரிசனத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஹெலிகாப்டர் இறங்கும் இடம் குறித்தும் விரிவான அறிக்கையை கேட்டது. இதனையடுத்து பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு ராம்நாத் கோவிந்தை அழைத்து செல்வது குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேரள அரசு ஆலோசித்தது.

இதனையடுத்து நிலக்கல் அல்லது பாண்டி தாவளத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதியில் ஹெலிபேட் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்தநிலையில் பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை தலைவர் அந்த மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் "குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஹெலிபேட் அமைப்பதற்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு சபரிமலை சென்றது. அப்போது ஹெலிபேட் அமைக்கும் அளவுக்கு நீர்த்தேக்க தொட்டி பலமானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும் அதிகளவிலான பக்தர்கள் நிலக்கல்லுக்கு வருவதால் அங்கே ஏற்கெனவே இருக்கும் ஹெலிபேட் உபயோகப்படுத்துவது சரியாக இருக்காது" என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஆலோசித்த கேரள அரசும், தேவஸம்போர்டும் குடியரசுத் தலைவருக்கு விரிவான அறிக்கையை அனுப்பியது. அதில் குறுகிய காலத்தில் குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராம்நாத் கோவிந்தின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டது. கடந்த 1973 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி முதன்முதலாக சபரிமலையில் தரிசனம் செய்தார். அதன்பிறகு எந்தவொரு குடியரசுத் தலைவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com