மம்தா பானர்ஜி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் - திமுக, காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்பு

மம்தா பானர்ஜி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் - திமுக, காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்பு
மம்தா பானர்ஜி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் - திமுக, காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்பு
Published on

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக டெல்லியில் நாளை மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளன.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசு தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுப்பர்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில், பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அறிவிக்க, காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் இந்தத் தகவலை, சரத்பவார் மறுத்துள்ளார். இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில், டெல்லியில் நாளை, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், சரத்பவாரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க. சார்பில் மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கலந்து கொள்ள உள்ளார். இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வுக்கு கடும் போட்டி அளிக்கக் கூடிய வகையில், பொது வேட்பாளரை களமிறக்கும் பணிகளில், எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

செய்தியாளர் : விக்னேஷ் முத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com