2022 -23க்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.
கூட்டத்தில் பேசிய அவர், ‘’இந்தியா தனது 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் வணக்கங்கள். வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை நினைவுகூர்கிறேன்.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டன. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது. கொரோனா தடுப்பூசி நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த காலங்களைவிட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு பெரிய அளவில் முன்னேற்றமடைந்திருக்கிறது. உலகிற்கு ஏராளமான மருந்து பொருட்களை இந்தியா கொடுத்து உதவியிருக்கிறது.
மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்மூலம் ஏழை மக்கள் சுகாதார திட்டங்களை பெறுவதற்கு உதவியாக இருந்தது. நேரடி மானியம் மூலம் ஏழைகள் பணம் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. கிராமங்களுக்கு குழாய்மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஏராளமான பெண்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. சமுதாயத்தில் சமநிலை இருக்கவேண்டும் என்ற அம்பேத்கரின் எண்ணத்தை செயல்படுத்துவதில் அரசு தீவிரம்காட்டி வருகிறது.
கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்திப் பொருட்கள் 33% உயர்ந்துள்ளது. பேரிடர் ஏற்பட்ட பொழுதெல்லாம் விவசாயிகளுக்கு உரிய நிவாரனம் சரியான காலத்தில் வழங்கப்பட்டது; மத்திய அரசு அமைத்துள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் விவசாயிகளுக்கு பெரிய உதவியாக உள்ளது. நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
’பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ திட்டம் பெண்கள் முன்னேற வழிவகை செய்துள்ளது. இஸ்லாமிய பெண்கள் பெரும் சவால்களை சந்தித்துவந்த முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்று பேசினார்.
தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசும்போது ’ ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவது இது 5வது முறையாகும்.