கவுதம் காம்பீர், நடிகர் மனோஜ் பாஜ்பாய் உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.
இந்த வருடம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல்கட்டமாக, 56 பேருக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் கடந்த 11 ஆம் தேதி வழங்கப் பட்டன. நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா, ஆன்மீகவாதி பங்காரு அடிகளார், டிரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இசை அமைப்பாளரும் பாடகருமான சங்கர் மகாதேவன் உட்பட 56 பேர், குடியரசுத் தலைவரிடம் பத்ம விருதுகளை பெற்றனர். மற்றவர்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப் படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
(தபேலா இசைக்கலைஞர் ஸ்வாபன் சவுத்ரி)
அதன்படி, குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் இன்று விருதுகள் வழங்கப்பட்டன. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர், சமூகச் செயற்பாட்டாளர் பிரகாஷ் ராவ், பேஸ்கட்பால் வீராங்கனை பிரஷாந்தி சிங், வில்வித்தை வீராங்கனை லைஷ்ராம் பாம்பல்யா, இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, தபேலா கலைஞர் ஸ்வாபன் சவுத்ரி, நடிகர் மனோஜ் பாஜ்பாய், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், நடன கலைஞர் நர்த்தகி நட்ராஜ், அறுவை சிகிச்சை மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி, சின்னப்பிள்ளை உட்பட 56 பேர் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.